தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கல்யாண கிருஷ்ணா, நடிகர் நாகர்ஜுனா இரட்டை வேடங்களில் அசத்திய சொக்கடே சின்னி நயனா திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதை அடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி வருகிறார்.

தொடர்ந்து நாக சைதன்யா நடிப்பில் ரொமான்டிக் காமெடி திரைப்படமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டான ரரனோடி வெடுகா சுத்தம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணா அடுத்து நடிகர் ரவி தேஜா நடிப்பில் ஆக்சன் காமெடி திரைப்படமாக இயக்கிய நெலா டிக்கெட் திரைப்படமும் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. இந்த வரிசையில் சமீபத்தில் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பங்கார்ராஜு.

இயக்குனர் கல்யாண் கிருஷ்ணாவின் முதல் திரைப்படமாக வெளிவந்த சொக்கடே சின்னி நயனா படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த பங்கார்ராஜு திரைப்படமும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. நாகர்ஜுனா, ரம்யா கிருஷ்ணன், நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்த பங்கார்ராஜு திரைப்படம் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி சங்கராந்தி வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஹிட் இயக்குனரான கல்யாண் கிருஷ்ணா தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சங்கராந்தி ப்ளாக்பஸ்டர் படமான பங்கார்ராஜு பட இயக்குனர் கல்யாண் கிருஷ்ணாவுடன் இணைந்து அடுத்து புதிய படத்தில் இணைவதை அறிவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.