தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் சுந்தர்.சி முறைமாமன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து பல நகைச்சுவை, மாஸ், கமர்சியல் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் சுந்தர்.சி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் & உலக நாயகன் கமல்ஹாசன் என இருபெரும் ஆளுமைகளையும் இயக்கியுள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அடுத்ததாக அரண்மனை 3 திரைப்படம் தயாராகியுள்ளது. நடிகர் ஆர்யா, சுந்தர்.சி, ஆன்ட்ரியா மற்றும் ராஷி கண்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க யோகி பாபு, குஷ்பூ, சம்பத், கோவை சரளா, மனோபாலா, சித்ரா லட்சுமணன், வின்சென்ட் அசோகன் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இவர்களோடு இணைந்து மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தலைநகரம் படத்திலிருந்து கதாநாயகனாக நடித்து வரும் சுந்தர்.சி கடைசியாக நடித்த திரைப்படம் இருட்டு. ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த இருட்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சுந்தர்.சி  கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது. கட்டப்பாவ காணோம் திரைப்படத்தின் இயக்குனர் VR.மணி செய்யோன் இயக்கத்தில் உருவாகும் #SUNDARC19 படத்தை VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் VR மணிகண்டன் ராமன் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தில் இயக்குனர் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்க தடம் மற்றும் தாராள பிரபு படங்களின் கதாநாயகி நடிகை தன்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.