சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை முடிவை கையில் எடுப்பது கடந்த சில நாட்களாய் அதிகரித்து வருகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகையான சித்ரா தனது காதல் கணவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து கடந்த வாரம் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் ஸ்ரீவத்ஸவ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் சின்னத்திரை நடிகரான இந்திரகுமார் என்பவர் தனது நண்பரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தமிழர்கள் முகாமைச் சேர்ந்தவர் இந்திர குமார்.

இவர் தனியார் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் சினிமா பார்த்துவிட்டு நண்பரின் வீட்டில் தூங்கியுள்ளார். நேற்று காலை இந்திரகுமார் வெளியே வராததால் நண்பர், அறைக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது இந்திரகுமார் ஃபேனில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவருடைய உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட இந்திர குமாருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். சினிமாவில் நடிக்கலாம் என்ற ஆசையில் இருந்த அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிகிறது. அதேநேரத்தில் குடும்பத்திலும் சில பிரச்சனைகள் இருந்து வந்ததாக தெரிகிறது.