தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான பாடலாசிரியர் விவேக், நடிகர் சித்தார்த் நடித்து வெளிவந்த எனக்குள் ஒருவன் திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து இறுதிச்சுற்று, இறைவி, கபாலி, மெர்சல், பரியேறும் பெருமாள், பேட்டை ,பிகில் என பல வெற்றித் திரைப்படங்களில் சூப்பர்ஹிட்டான பாடல்களின்  பாடல் வரிகளை எழுதியுள்ளார். 

குறிப்பாக இறுதிச்சுற்று திரைப்படத்தின் “ஏய் சண்டக்காரா” மெர்சல் திரைப்படத்தில் “ஆளப்போறான் தமிழன்” ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் “அடியே அழகே” பிகில் திரைப்படத்தில் “சிங்கப் பெண்ணே” போன்ற பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் இவரின் வரிகளைக் ஆகவே அதிகம் ரசிக்கப்பட்டது. 

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான பாடலாசிரியராக பயணிக்கும் பாடலாசிரியர் விவேக்கின் வாழ்க்கையில் தற்போது சோகம் சூழ்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையின் கோரப்பசிக்கு  இந்த உலகத்தில் பலரும் பலியாகி வருகின்ற சூழ்நிலையில் பாடலாசிரியர் விவேக்கின் மிக நெருங்கிய நண்பர்கள் இருவர் கொரோனாவால் இன்று காலமானார்கள். 

இது குறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள பாடலாசிரியர் விவேக், “ஒரே நாளில் எனக்கு மிகவும் நெருக்கமான இரண்டு நண்பர்களை நான் இழந்துள்ளேன். இது உங்கள் அனைவரையும் பயப்பட வைக்கும் பதிவு  அல்ல இந்த கடினமான காலகட்டத்தை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற அக்கறையில்  செய்த பதிவு” என பதிவிட்டுள்ளார். பாடலாசிரியர் விவேக் அவர்களின் இரண்டு நண்பர்கள் ஒரே நாளில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.