பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லி. “ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தளபதி விஜயுடன் இணைந்து அட்லி இயக்கிய தெறி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.தெறி வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து மெகாஹிட் திரைப்படங்களை இயக்கினார்.

A For APPLE  புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளராக களமிறங்கிய இயக்குனர் அட்லி நடிகர் ஜீவா நடித்த சங்கிலி புங்கிலி கதவ தொற  படத்தின் மூலம் தயாரிப்பாளரானார். அதையடுத்து அவர் தயாரித்த அந்தகாரம் திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது. இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் விக்னராஜன் இயக்கியிருந்தார். வித்தியாசமான த்ரில்லர் திரைப்படமாக வந்த அந்தகாரம் படம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது இவரது தயாரிப்பில் அடுத்ததாக அட்லீயின் உதவி இயக்குனர் இயக்கும் புதிய திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான நடிகர்  ஜெய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் சினிமாவின் பிரபல PRO நிகில் முருகன் அவர்கள் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இயக்குனர் அட்லி அடுத்ததாக  இயக்கும் புதிய திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் நடிக்க உள்ளார் என்ற தகவல் முன்பே வெளியான நிலையில் அத்திரைப்படத்தை குறித்த அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது.