தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான AXESS பிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு தயாரிப்பில் உருவான மரகதநாணயம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து சமீபத்தில் இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

அடுத்ததாக தயாரிப்பாளர் ஜீ.டில்லிபாபு தயாரிக்கும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்க இருந்த புதுமுக இயக்குனர் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பே உயிரிழந்த சம்பவம் தமிழ் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AXESS பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் மற்றும் வெளியிடும் திரைப்படங்களின் முக்கிய பணிகளில் பணியாற்றிய திரு.ராஜா  AXESS பிலிம்  பேட்டரி திரு.ஜி.டில்லிபாபு தயாரிக்கும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். முன்னணி நடன இயக்குனரும் , இயக்குனருமான   நடிகர் லாரன்ஸ் மற்றும் ராஜ்கிரண் இணைந்து நடிக்க இருந்த ஒரு புதிய திரைப்படத்தை இயக்குனர் ராஜா இயக்குவதாக இருந்தது. 

இந்நிலையில் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் ராஜா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த இயக்குனர் ராஜா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் இயக்குனர் விருமாண்டியும் இயக்குனர் ராஜாவும் உதவி இயக்குனர்களாக  ஒன்றாக பணியாற்றியுள்ளனர். இந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஓ மை கடவுளே திரைப்படத்தின் தயாரிப்பிலும் இயக்குனர் ராஜா பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க  இருந்த தனது முதல் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பாகவே இயக்குனர் ராஜா திடீரென கொரோனாவால் தற்போது உயிரிழந்திருப்பது தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த இளம் இயக்குனர் திரு.ராஜா அவர்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.