சேரன் இயக்கிய வெற்றிக்கொடிக்கட்டு படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் நடிகர் பெஞ்சமின். மேடை நாடக கலைஞராக துவங்கி, திரையில் கிடைக்கும் சிறு சிறு வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். வெற்றிக்கொடிக்கட்டு படத்தில் வடிவேலுவுடன் இவர் நடித்த பாத்திரம் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. 

2005-ம் ஆண்டில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்து அசத்தியிருப்பார். கிராமத்து இளைஞனாக வரும் விஜய்யின் நண்பன் கண்ணப்பன் எனும் பாத்திரத்தில் நடித்து ஈர்த்திருப்பார் பெஞ்சமின். அதன் பின் ஆட்டோகிராப் என தொடர்ந்து நல்ல நல்ல பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். 

இந்நிலையில் நடிகர் பெஞ்சமின் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதுகுறித்து விசாரித்த கலாட்டா சிறப்பு குழு, நடிகர் பெஞ்சமின் தரப்பினரை அணுகியது. அப்போது அவரது செய்தி தொடர்பாளரிடம் கேட்ட போது, இதய கோளாறு ஏற்பட்டதால் சேலம் மருத்துவமனைக்கு விரைந்ததாக கூறப்பட்டது. தற்போது பெஞ்சமின் நல்லபடியாக உள்ளதாகவும் தெரியவந்தது. 

ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நடிகர் பெஞ்சமின் குடும்பத்துடன் சேலத்தில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

2020-ம் ஆண்டு திரைப்பிரபலங்களுக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்து வருகிறது. கொரோனா எனும் கொடிய வைரஸின் கோர தாண்டவம் ஒருபுறம் இருந்தாலும், நடிகை நடிகையர்கள் பற்றிய கெட்ட செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. பாலிவுட் பிரபலம் சுஷாந்த் சிங் ராஜ்புட் துவங்கி சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் வரை என தொடர்ச்சியான துக்க செய்திகள் திரை ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.