இயக்குனர் ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் சிங்கம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சிங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன.இந்நிலையில் தற்போது சிங்கம்-2 திரைப்படத்தில் நடித்த வெளிநாட்டு நடிகர் செக்வூம் மல்வின் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

சிங்கம் 2 படத்தில் வில்லனாக நடித்த டேனி சபானி உடன் இணைந்து துணை நடிகராக நடித்த நடிகர் செக்வூம் மல்வின் சிங்கம் 2 படத்தில் போதை பொருள் கடத்திய விவகாரத்தில் சூர்யா கைது செய்யப்பட்டது போலவே நிஜத்திலும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீப காலமாக கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் பெருகிவரும் போதைப் பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த போலீசார் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் பெங்களூருவின் கே.ஜி.ஹள்ளி பகுதியில் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வெளிநாட்டு நபர் குறித்த ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. 

உடனடியாக விரைந்த போலீசார் சந்தேகப்படும்படியாக அந்தப் பகுதியில் இருந்த நைஜீரியாவை சேர்ந்த 45 வயதான செக்வூம் மல்வின் என்ற நபரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர் நடிகர் செக்வூம் மல்வின் என்பதும் சிங்கம் 2 படம் உட்பட தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
suriya singam 2 nigerian actor arrested for smuggling drugs in bengaluru