தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார்.

முன்னதாக இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில், சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி தீபாவளி வெளியீடாக அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகிறது.

இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. கடந்த 2001-ஆம் ஆண்டில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நந்தா திரைப்படம் நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு வெளியான பாலாவின் பிதாமகன் திரைப்படத்திலும் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தவகையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். 

இதுகுறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்… 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…” என தெரிவித்து இயக்குனர் பாலா மற்றும் தந்தை சிவகுமாருடன் சூர்யா இணைந்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். சூர்யாவின் அந்த ட்விட்டர் பதிவு இதோ...