இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2016-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது.

சுதா கொங்கரா அடுத்ததாக சூர்யாவை வைத்து இயக்கி உள்ள படம் சூரரைப் போற்று. இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையையோட்டி நவ 12-ந் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படம் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. 

இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

சமீபத்தில் வெளியான ட்ரைலர் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. சூர்யாவின் அசத்தலான நடிப்பு மற்றும் வசனங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது. இதைத்தொடர்ந்து படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. 

இந்நிலையில் சுதா கொங்கராவின் மகள் உத்தராவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. அந்த திருமண விழாவில் சூர்யா மற்றும் இயக்குனர் மணிரத்னம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சூர்யாவின் நியூ லுக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமண புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சூர்யாவின் புது கெட்டப்பை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னம் தனது செல்போனில் புகைப்படம் எடுப்பதும் வைரலாகி வருகிறது.