தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ள ஜெய் பீம் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படத்தை தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்து நடித்திருந்தார் சூர்யா. மேலும் நடிகை லிஜோமொள் ஜோஸ், மணிகண்டன் மற்றும் ராஜிஷா விஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, குரு சோமசுந்தரம், M.S.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஜெய் பீம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை குறித்து மிகவும் அழுத்தமாக பேசப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் IMDb-பட்டியலில் உலக அளவில் முதல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து உலக சினிமாவின் உயரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் க்ளோப் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதுக்கு ஜெய்பீம் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில்  சர்வதேச  திரைத்துறையில் உயரிய விருதுகளில் மிக முக்கிய விருதான ஆஸ்கார் தற்போது ஜெய்பீம் திரைப்படத்திற்கு சிறப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.

ஜெய்பீம் திரைப்படத்தின் கதை கருவையும், நடைபெற்ற உண்மை சம்பவத்தையும், ஜெய்பீம் படத்தின் காட்சிகளையும் விவரிக்கும் விதமாக இயக்குனர் T.J.ஞானவேல் ஒருபுறம் காட்சிகளை விளக்க தொடர்ந்து அந்த காட்சிகள் ஒளிபரப்பாகும் வகையிலான புதிய வீடியோ ஒன்றை ஆஸ்கார் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டு ஜெய் பீம் திரைப்படத்தை கௌரவித்துள்ளது. “ஜெய் பீம்-Scene at the Academy” என குறிப்பிட்டு ஆஸ்கார் வெளியிட்டுள்ள இந்த வீடியோவால் மீண்டும் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது ஜெய் பீம் திரைப்படம். ஆஸ்கார் வழங்கிய இந்த சிறப்பு அங்கீகாரம் குறித்து ஜெய்பீம் படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.