சூரரைப் போற்று படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக வெளிவந்தது ஜெய் பீம் திரைப்படம். மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் மற்றும் அநீதிகள் கொண்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா தனது 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்து நடித்துள்ளார்.

ஜெய் பீம் படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான நாள் முதல் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சூர்யாவுடன் இணைந்து லிஜோமொள் ஜோஸ்,மணிகண்டன், பிரகாஷ் ராஜ், ராஜிஷா விஜயன்,குரு சோமசுந்தரம்  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர் . ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்தது.

சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள ஜெய் பீம் படம் முன்னதாக கோல்டன் க்ளோப் விருதுகளுக்கான பரிந்துரைப்பட்டியலுக்கு தேர்வானது. ஆனால் இறுதி நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாமல் போனது இதனையடுத்து சிலதினங்களுக்கு முன், இயக்குனர் T.J.ஞானவேல்  ஜெய்பீம் திரைப்படத்தின் கதை கருவையும், நடைபெற்ற உண்மை சம்பவத்தையும், காட்சிகளையும் விவரிக்கும் விதமாக ஜெய்பீம் பட காட்சிகள் ஒளிபரப்பாகும் வகையிலான புதிய வீடியோ ஒன்றை ஆஸ்கார் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டு ஜெய் பீம் திரைப்படத்தை கௌரவித்துள்ளது.  

இந்நிலையில் தற்போது ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைப்பட்டியலுக்கான தேர்வில் இடம்பெற்றுள்ளது ஜெய்பீம். உலகின் பல மொழிகளிலும் இருந்து 276 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 94 வது ஆஸ்கார் விருதுகளின் பரிந்துரைக்கான பட்டியலில் ஜெய் பீம் தேர்வாகியுள்ளது. வருகிற பிப்ரவரி 8-ஆம் தேதி இந்த படங்களில் இருந்து இறுதி பரிந்துரை பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே  ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியலில் இடம் பெரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காத்திருப்போம் .