தமிழ் திரையுலகில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராகவும் முன்னணி கதாநாயகனாகவும் வலம் வரும் நடிகர் சூர்யா, தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ்-கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். விரைவில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக வெளிவருகிறது சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம்.

நடிகர் சூர்யாவுடன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் ராஜிஷா விஜயன், லிஜோ மொள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர்  நடிக்க, பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் T.J.ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார். 

வருகிற நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ரிலீஸாகும் ஜெய்பீம் படத்திற்கு ஒளிப்பதிவாளர் S.R.கதிர் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மலை கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையை கதைக்களமாகக் கொண்டு தயாராகியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜெய்பீம் படத்தின் முதல் பாடலாக “பவர்” பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.