கடந்த நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளிவந்த நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் அகில இந்திய அளவில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ரிலீசான நாள் முதல் இன்று வரை ஜெய் பீம் திரைப்படம் குறித்து பலகோடி ரசிகர்களும், திரை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் இத்திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பட குழுவினரையும் நடிகர் சூர்யாவையும் பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஆனால் ஜெய் பீம் திரைப்படம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை தாக்கும் விதமாக இருப்பதாக ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக சில கேள்விகளை முன்வைத்து மதிப்பிற்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் முன்னதாக அறிக்கை வெளியிட்ட நிலையில் அதற்கு விளக்கமளிக்கும் வகையில் சூர்யா தனது பதிலடி அறிக்கையை வெளியிட்டார்.

இதனையடுத்து வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகமெங்கும் ஒரு சில இடங்களில் போராட்டங்கள் எழுந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக ஜெய்பீம் தொடர்பாக சூர்யா மீது வழக்கு தொடரப்பட்டு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வன்னியர் சங்கத்தினர் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கு தொடர்ந்து பலரும் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். முன்னதாக இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சத்யராஜ், இயக்குனர் பா.ரஞ்சித், இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பலகோடி மக்களும் சூர்யாவுடன் துணை நிற்பதாக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூர்யா ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,  

“அன்பான அனைவருக்கும்,  
ஜெய்பீம் மீதான உங்களது இந்த அன்பு என்னை பெரும் நெகழ்ச்சிக்குள்ளாக்கியது… இதுவரை இப்படி நான் உணர்ந்ததில்லை... என் மீதான உங்களது நம்பிக்கைக்கும் & எங்களுடன் உறுதியாக நீங்கள் இப்படி நிற்பதற்கும் எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை... எங்களோடு துணைநிற்கும் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்... 

என தெரிவித்துள்ளார். சூர்யாவின் அந்த பதிவு இதோ...