தமிழ் திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் துயரங்கள் நிறைந்த வாழ்க்கையையும் அவர்களுக்கு நேர்ந்த அநீதியையும் மையப்படுத்திய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது.

முன்னதாக நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக இருளர் பழங்குடி இன மக்களின் கல்வி நலனுக்காக ரூபாய் 1 கோடியை வழங்கினார். தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஜெய்பீம் திரைப்படத்தின் கதாபாத்திரங்களாக நிஜத்தில் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாளுக்கு புதிய வீடு கட்டி தருவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது நடிகர் சூர்யா பார்வதி அம்மாளுக்கு வைப்புத் தொகையாக அவரது வங்கிக்கணக்கில் 10 லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்த தனது அறிக்கையில்,”மறைந்த திரு. ராஜாகண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள்
முழுவதும் பயனளிக்கும் வகையில், திரு. பார்வதி அம்மாள் அவர்களின் பெயரில் 'பத்து இலட்சம் ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதம்தோறும், அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய் சேரும்படி செய்யலாம்.

மேலும் குறவர் பழங்குடி சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்கு உதவுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். கல்விதான் வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்திற்கு நிரந்தர தீர்வு. ஆகவேதான் 'ஜெய் பீம்' திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவி செய்தோம். மக்களின் மீதான தங்கள் இயக்கத்தின் அக்கறை மிகுந்த செயல்பாடுகளுக்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய மக்கள் களப்பணி தொடர
மனப்பூர்வமான வாழ்த்துகள்.. தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யாவின் அந்த அறிக்கை இதோ...