தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் பலகோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் வரிசையாக ஹிட்டடிக்க, தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் மீது தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.

அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல். சமீபத்தில் சென்னையில் உள்ள ஈசிஆரில் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்ற நிலையில் விரைவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் பாலாவுடன் இணைந்துள்ள நடிகர் சூர்யா புதிய திரைப்படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த மார்ச் 28-ம் தேதி தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கன்னியாகுமரியில் நடைபெற்றது. 

இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகை நமீதா பைஜூ முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் 34 நாட்களாக கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2-ம் கட்ட படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் கோவாவில் 15 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும் இதற்காக பிரத்யேக செட் அமைக்கப்படுவதாகவும் அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.