தமிழ் திரை உலகில் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் தனது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தமிழ் சினிமாவிற்கு பல சிறந்த திரைப்படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் சூர்யா. அந்த வகையில் OTT-யில் தனது தயாரிப்பில் உருவாகியிருக்கும் 4 புதிய திரைப்படங்களின் அடுத்தடுத்த அதிரடி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.

முதலாவதாக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் நடிகைகள் வாணிபோஜன் மற்றும் ரம்யா பாண்டியன் இணைந்து நடித்துள்ள ராமே ஆண்டாலும் ராவணனே ஆண்டாலும் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியாக உள்ளது.

தொடர்ந்து நடிகை ஜோதிகா, நடிகர்கள் M.சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி மற்றும் கலையரசன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படத்தை இயக்குனர் இரா.சரவணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படமும் அமேசான் பிரைம் வீடியோவில் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

அடுத்ததாக இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் வெளியீடாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இப்படத்தில் ராஜிஷா விஜயன் ,மணிகண்டன் ,லிஜோ மொள் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடைசியாக நடிகர் அருண் விஜய் மற்றும் அருண் விஜய்யின் தந்தை விஜயகுமார் மற்றும் அருண் விஜய்யின் மகனான அர்னவ் அருண் விஜய் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ஓ மை டாக் திரைப்படம் டிசம்பர் மாதம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இயக்குனர் சரோவ் சண்முகம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கும் இந்த அருமையான நான்கு திரைப்படங்களும் வருகிற ஒவ்வொரு மாதமும் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் திரைப்படங்களுக்கான எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.