பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 15) முதல் தொடங்கப்பட்டுள்ளது. சூர்யாவைத் தவிர்த்து இதர படக்குழுவினர் இந்தப் பூஜையில் கலந்து கொண்டனர்.

தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி, வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் சூர்யா. ஆகையால், சில நாட்கள் கழித்துப் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அவருடைய தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாயகியாக பிரியங்கா மோகன், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

மேலும் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் வில்லனாக நடிப்பதற்கு சில முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சூர்யா 40 என அழைத்து வருகிறது படக்குழு. ஏனென்றால், இது சூர்யா நடிப்பில் உருவாகும் 40-வது படமாகும். இதற்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்தை முடித்துவிட்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.