என்றென்றும் மக்களின் இதயங்களில் சூப்பர் ஸ்டாராக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான பாபா திரைப்படம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் புது பொலிவுடன்  ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு டிசம்பர் மாதம் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் 12ஆம் தேதி ரிலீசாக தயாராகி வருகிறது. ரஜினிகாந்த் அவர்கள் தயாரித்து, கதை, திரைக்கதை எழுதிய பாபா திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 

முழு படத்தையும் மீண்டும் படத்தொகுப்பு செய்து 3 மணி நேர திரைப்படத்தை இரண்டரை மணி நேர திரைப்படமாக மாற்றி ஃபிரேமுக்கு ஃபிரேம் காட்சிகளை மெருகேற்றி, சவுண்டிலும் 5.1DTSல் இருந்து டால்பிக்கு இணையான மாற்றங்களை செய்து தற்போதைய ரசிகர்கள் விரும்பும் படியாக பாபா திரைப்படம் ரீ-ரிலீஸாக உள்ளது. இதனிடையே நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பாபா திரைப்படம் குறித்த பல சுவாரசிய தகவல்களை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் பாபா திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஆட்டோ பயோகிராபி திரைப்படமா என சுரேஷ் கிருஷ்ணா அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஏனென்றால் தனது வாழ்க்கையிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்ப கட்டத்தில் எப்படி இருந்தார். பின்னர் ஆன்மீகத்திற்குள் எப்படி நுழைந்தார். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த சமயங்களில் அவரது அரசியல் குறித்த பார்வை என பல விஷயங்களும் பாபா திரைப்படத்தில் இடம் பெற்றது இதற்கு ஒரு முக்கிய காரணம்.

இதற்கு பதிலளித்த சுரேஷ் கிருஷ்ணா அவர்கள், “பாபா படத்தில் மட்டுமல்ல அண்ணாமலை திரைப்படத்தில் கூட கிளி ஜோசியக்காரரிடம் “அம்மாவால் உனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது” என சொல்லும் ஒரு வசனம் உண்டு அது அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் ஒரு சட்டமன்ற உறுப்பினரை எதிர்த்து பேசும் காட்சிகளும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. வழக்கமாகவே ரஜினிகாந்த் எந்த திரைப்படம் நடித்தாலும் எந்த மாதிரியான வசனங்கள் பேசினாலும் அவரது நிஜ வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி கொள்வார்கள். எனவே பாபா திரைப்படத்தை அவரது பயோகிராபி திரைப்படமாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. அரசியல் சார்ந்த பல வசனங்களையும் காட்சிகளையும் கொண்டு அப்படி முடிவு செய்யும் பட்சத்தில், படத்தில் மற்றொரு வசனமும் உண்டு “சீஃப் மினிஸ்டர்ங்கறத விளையாட்டா நினைச்சிட்டீங்களாடா யார் வேணாலும் ஆகிடலாமா” என பேசியிருக்கிறார். அதை தான் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதை யாரும் அதிகம் பேசவில்லை. எனவே இந்தப் படம் அவரது பயோகிராபியாக எடுக்க வேண்டும் என்ற எந்த உள்நோக்கத்துடனும் எடுக்கப்படவில்லை. ஆனால் கதை கருவாக பார்க்கும் போது அது அப்படித்தான் இருக்கும்” என சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சுரேஷ் கிருஷ்ணாவின் அந்த முழு பேட்டி இதோ