ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களுக்கும் ஃபேவரட் ஹீரோவாகவும் என்றென்றும் மக்களின் மனதில் சூப்பர் ஸ்டாராகவும் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்திலும் முக்கியமான கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான பாபா திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது. மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் புது பொலிவுடன்  ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு டிசம்பர் மாதம் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் 12ஆம் தேதி ரிலீசாக தயாராகி வருகிறது. 

ரஜினிகாந்த் அவர்கள் தயாரித்து, கதை, திரைக்கதை எழுதிய பாபா திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். முழு படத்தையும் மீண்டும் படத்தொகுப்பு செய்து 3 மணி நேர திரைப்படத்தை இரண்டரை மணி நேர திரைப்படமாக மாற்றி ஃபிரேமுக்கு ஃபிரேம் காட்சிகளை மெருகேற்றி, சவுண்டிலும் 5.1DTSல் இருந்து டால்பிக்கு இணையான மாற்றங்களை செய்து தற்போதைய ரசிகர்கள் விரும்பும் படியாக பாபா திரைப்படம் ரீ-ரிலீஸாக உள்ளது. 

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பாபா திரைப்படம் குறித்த பல சுவாரசிய தகவல்களை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பகிர்ந்து கொண்டார். அப்போது பேசுகையில், “படையப்பா திரைப்படத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் எந்த திரைப்படமும் நடிக்காமல் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அந்த சமயத்தில் ஆன்மீகத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இமயமலை போக விரும்புவதாகவும் இவை அனைத்தையும் தொடர எண்ணம் இல்லை என்றும் தெரிவித்து வந்த ரஜினிகாந்த் அவர்கள் திடீரென அந்த சமயத்தில் இந்த கதையை என்னிடம் கூறினார்” என பாபா திரைப்படத்தின் கதையை ரஜினிகாந்த அவர்கள் விவரித்தது குறித்து பல விஷயங்களை சுரேஷ் கிருஷ்ணா பகிர்ந்து கொண்டார். அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.