உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. முன்னதாக விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விடைபெற்று செல்வதாக அறிவித்ததோடு பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிலம்பரசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.  வழக்கம்போல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் அனிதா சம்பத் வெளியேறினார்.

முன்னதாக பிக் பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளருமான சுரேஷ் சக்கரவர்த்தி முதல் வாரத்திலேயே வெளியேறிய போதும் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார். அவரைத் தொடர்ந்து விஜய் டிவியின் முக்கிய பிரபலமும் நடிகருமான KPY.சதீஷ் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் திடீரென சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். தனது உடல் நலம் காரணமாக மருத்துவர்கள் கூறிய அறிவுரைகளின் படி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி தற்போது வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.