வயது இவருக்கு வெறும் நம்பர் தான் என சொல்லும் அளவிற்கு இன்னும் அதே வேகத்தோடு அதே ஸ்டைலோடு ரசிகர்களை அன்பால் கட்டிப்போட்டு தனது மாஸ்ஸான திரைப்படங்களால் மகிழ்வித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். அந்தவகையில் ரசிகர்களுடன் தீபாவளி கொண்டாட வருகிறார் அண்ணாத்த.

தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சிவா முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்துள்ள அண்ணாத்த திரைப்படத்தை பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் அவர்கள் தயாரிக்க, வெற்றி ஒளிப்பதிவில், பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.

அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, ஜாக்கி ஷெராப், சூரி, ஜார்ஜ் மரியான், சதீஷ், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸாகும் அண்ணாத்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிறவிட்டது 

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் 3-வது பாடல் அறிவிப்பு வெளியானது. முன்னதாக வெளிவந்த அண்ணாத்த அண்ணாத்த... மற்றும் சாரக்காற்றே... ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகைகள் மீனா மற்றும் குஷ்பூ இடம்பெற்றுள்ள அண்ணாத்த படத்தின் 3-வது பாடலாக மருதாணி பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.