கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த். சில தினங்களுக்கு முன்பு இந்திய திரையுலகின் உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது 67-வது இந்திய தேசிய திரைப்பட விருது விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தொடரந்து புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் ரஜினிகாந்த். இந்நிலையில் திடீரென வியாழக்கிழமை(அக்டோபர் 28) சென்னையின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவிக்கும் பொழுது சூப்பர் ஸ்டார் நலமுடன் இருப்பதாகவும் வருடம் ஒருமுறை வழக்கமாக மேற்கொள்ளும் முழு உடல் பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைகள் முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மேலும் அண்ணாத்த படப்பிடிப்பின்போது இரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுதல்களால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.