தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்களுக்கு தமிழக மக்கள் மத்தியில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதில் மிகவும் முக்கியமான மெகா தொடர்களில் ஒன்று மெட்டிஒலி.

கடந்த 2002-லிருந்து 2005ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 800 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக  ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற ஃபேவரட் மெகா தொடரான மெட்டிஒலி அழகான குடும்பம் கதைக்களத்தை கொண்டு  இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்தது.

நடிகர்கள் டெல்லி குமார், காவேரி, காயத்ரி, வனஜா, உமா மகேஸ்வரி, ரேவதி, வெங்கடேசன், ராஜ்காந்த், திருமுருகன், போஸ் வெங்கட், நீலிமா ராணி, சஞ்சய், தீபா வெங்கட் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்த மெட்டிஒலி நிகழ்ச்சியின் “அம்மி அம்மி அம்மி மிதித்து” என்ற பாடலும் ரசிகர்களின் ஃபேவரட் பாடலாக இருந்தது.

இந்நிலையில் மெட்டிஒலி மெகா தொடரில் சிதம்பரத்தின் 5 மகள்களில் ஒரு கதாபாத்திரமான விஜி கதாபாத்திரத்தில் நடித்த உமாமகேஸ்வரி இன்று காலமானார். தமிழ் சினிமாவில் வெற்றி கொடி கட்டு உன்னைநினைத்து உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள உமாமகேஸ்வரி, முன்னதாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார்.

மஞ்சள் காமாலை நோயாலிருந்து மீண்டு வந்த போதும் உடல் நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால் இன்று திடீரென உயிரிழந்தார். அவருக்கு வயது 40. உமா மகேஸ்வரியின் மறைவுக்கு ரசிகர்களும் சின்ன திரையுலகமும் இரங்கல் தெரிவித்து வருகிறது.