சினிமா உலகையே தன் வசம் வைத்திருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். சினிமா மற்றும் அரசியல் என இரண்டு துறைகளிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். கலைநேசனான கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 61 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், அடுத்தடுத்து நடிகர், நடன கலைஞர், வசனம், பாடல்கள், இயக்குனர் என பல பரிமாணங்களை தொட்டார்.

தனது 5-வது வயதில் சினிமாவுக்குள் நுழைந்த கமல்ஹாசன் 25-வது வயதிலேயே ராஜ பார்வை திரைப்படத்தில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். அதற்கு முன்பே, எம்ஜிஆர், சிவாஜிகணேசன், ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படங்களில் நடன உதவியாளராக பணியாற்றினார். தனது செல்வாக்கு உயர்ந்த சூழலில்கூட சினிமா வழியே தான் ஈட்டிய பணம் முழுவதையும் சினிமாவிலேயே உபயோகித்தவர் நம்மவர். 

ரசிகர்களால் அன்போடு ஆண்டவர் என்றழைக்கப்படும் நம்மவரின் சாதனை பயணத்தை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருவதோடு நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர். பல கலைஞர்கள் அவருக்கு ட்ரிபியூட் செய்து வருவதை காண முடிகிறது. கமல் ஹாசன் போல் மேக்கப் செய்வது, அவரது ஹிட் பாடல்களை பாடுவது, அவர் நடித்த படங்களின் காட்சிகளை ரீகிரியேட் செய்வது என அசத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நடிகை சுபிக்ஷா அற்புதமாக நடனமாடி உலகநாயகனுக்கு சமர்பித்துள்ளார். கமல் ஹாசனின் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற முகுந்தா முகுந்தா பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். சிறந்த நடிகையான சுபிக்ஷா, சீரான நடனக்கலைஞரும் கூட... குறிப்பாக பரதத்தில் கைதேர்ந்தவர். 

கடந்த 2013-ம் ஆண்டு அன்னக்கொடி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சுபிக்ஷா. அதன் பிறகு கன்னட, மலையாள படங்களில் நடித்தாலும், தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 2018-ம் ஆண்டு வெளியான கோலி சோடா 2 படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து நேத்ரா படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நெட்டிசன்களின் பாராட்டை பெற்று வரும் சுபிக்ஷா, கமல் ஹாசனின் வாழ்த்தையும் பெற கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.