வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. 

முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார் சிலம்பரசன். ஒரு மாத காலத்திற்குள் நடித்து முடித்ததுடன், டப்பிங்கும் பேசிக் கொடுத்துவிட்டார். சிம்பு, இப்படி தீயாக வேலை செய்வதை பார்த்து வியக்காதவர்களே இல்லை. இதே போன்று இருங்கள் சிம்பு என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

புதுச்சேரியில் நடந்து வரும் மாநாடு படப்பிடிப்பில் சிம்பு நடித்து வருகிறார். முறையான பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. முன்பெல்லாம் சிம்புவின் படங்கள் பற்றி இயக்குனர்கள் அல்லது தயாரிப்பு நிறுவனங்கள் அப்டேட் கொடுத்தால் தான் தெரிய வரும். ஆனால் தற்போது அப்படி இல்லை. சிம்பு மீண்டும் சமூக வலைதளங்களில் என்ட்ரி கொடுத்ததில் இருந்து தன் படங்கள் குறித்து அவரே அவ்வப்போது அப்டேட் கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார். 

கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. 

மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் கடந்த வாரம் நவம்பர் 21-ம் தேதி வெளியாகி அசத்தியது. அப்துல் காலிக்காக நடிக்கும் சிலம்பரசனின் நடிப்பை காண ஆவலாக உள்ளனர் அவரது ரசிகர்கள். 

இந்நிலையில் மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிலம்பரசன் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு புகைப்படத்தில் பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி ஆகியோர் உள்ளனர். மற்றோரு புகைப்படத்தில் மேக்கப் ரூமில் இருந்து சிம்பு செல்ஃபி எடுப்பது போல் உள்ளது.