மாதவ் மீடியா தயாரிப்பில் சிம்பு நாயகனாக நடித்து வரும் படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். சென்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது உருவாகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட சிம்பு, இந்தப் படத்துக்காக உடல் இழைத்து முழுமையாக தன்னை அர்ப்பணித்து தயாராகியுள்ளார். அவருக்கு பொருந்தும் வகையில் இந்தக் கதையை செதுக்கியுள்ளார் சுசீந்திரன். 

இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். முதல் முறையாக சிம்பு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். யுகபாரதி பாடல் வரிகள் எழுதுகிறார். பாலாஜி கேசவன் வசனம் எழுதுகிறார். தொழில்நுட்பக் குழுவினரும் இந்தப் படத்துக்கு வலுவாக அமைந்திருப்பதால் வெற்றி உறுதியாகிறது என்றே கூறலாம். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு முடிவு செய்து மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. 2021-ம் ஆண்டு மக்களை மகிழ்விக்க இந்தப் படம் வெளியாகவுள்ளது. தொடர்ச்சியாக தரமான படங்களை மட்டுமே தயாரிக்க முடிவு செய்துள்ள மாதவ் மீடியா நிறுவனம், இந்தப் படமும் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் வகையில் இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறது. 

எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பவர் நடிகர் STR. சென்ற லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் எனும் குறும்படத்தில் நடித்து ஓர் ட்ரெண்ட் செட் செய்தார். இந்நிலையில் STR-ன் வீடியோ ப்ரோமோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அக்டோபர் 22-ம் தேதி வியாழக்கிழமை காலை 09:09 மணிக்கு சிலம்பரசன் அரைவிங் என்ற வீடியோ தொகுப்பு வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் சிம்பு வருகிறாரா ? அல்லது சுசீந்திரன் படத்தின் லுக் ஏதாவதா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

STR கைவசம் மாநாடு திரைப்படமும் உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். 

கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. 

கடந்த மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் சிம்பு. அப்போதும் பலரும் புகைப்படம் எடுக்கவே, முழுமையாக முகத்தை மூடிக் கொண்டுள்ளார். ஆனாலும், அந்தப் புகைப்படத்தை சிம்பு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.