சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இப்படத்தில் லதா பாண்டியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர். இவரது க்யூட்டான நடிப்பு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ஜீவா, இஞ்சி இடுப்பழகி, ஈட்டி, பெங்களூர் நாட்கள், பென்சில், மருது, ரெமோ, காஷ்மோரா, மாவீரன் கிட்டு, சங்கிலி புங்கிலி கதவ தொற, ஒத்தைக்கு ஒத்தை போன்ற படங்களில் நடித்தார். 

ஸ்ரீ திவ்யா இதுவரை நடித்த படங்களில் பெரும்பாலும் ஹோம்லி லுக்கிலே வலம் வந்துள்ளார். கவர்ச்சியில் அவர் இறங்கவில்லை. இதன் காரணமாக, அவருக்கு சினிமா வாய்ப்பு பெரிய அளவில் அமையவில்லை என்று பேச்சு புறம் இருந்தாலும், அதை பற்றி அவர் துளியும் நினைத்தது இல்லை. தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவான ஸ்ரீ திவ்யா, தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை மட்டும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் ஸ்ரீ திவ்யா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் தெரியவந்துள்ளது. பாசிட்டிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படத்தில் இணைந்துள்ளார். இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். 

தமிழ் திரையுலகில் இளம் ஹீரோவான கவுதம் கார்த்திக்குடன் முதல் முறையாக ஜோடி சேர்கிறார் ஸ்ரீ திவ்யா. இந்த ஜோடியை திரையில் காண ஆவலாக உள்ளனர் திரை ரசிகர்கள். இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் பானா காத்தாடி எனும் படத்தில் இயக்குனராக கால் பதித்தவர். தொடர்ந்து அதர்வா வைத்து செம போத ஆகாதே எனும் படத்தை இயக்கினார். 

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கடைசியாக உருவான பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ரியோ, ரம்யா நம்பீசன், ரோபோ ஷங்கர் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.