கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்று மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் இறந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் அறிவித்தார். எஸ்.பி.பி.யின் மகன் சரண் அந்த தகவலை உறுதி செய்தார்.

மருத்துவமனை முன்பு கூடியிருந்த செய்தியாளர்களிடம் சரண் பேசுகையில், அப்பாவுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்.பி.பி.யின் பாடல்கள் இருக்கும் வரை, நீங்கள் எல்லாம் இருக்கும் வரை அப்பா இருப்பார் என்றார்.

எஸ்.பி.பி.யின் மரண செய்தி அறிந்த பலரும் அவர் பாடிய பாடல்கள் இருக்கும் அவரை நிலைத்து இருப்பார் என்று தான் தெரிவித்துள்ளனர். முன்னதாக அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடம் என்று கூறியதுமே ரசிகர்கள் கவலை அடைந்தனர். எஸ்.பி.பி. இறந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை என்று தான் பலரும் கூறி வருகிறார்கள்.

எஸ்.பி.பி.யின் மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோவிட் 19, நிமோனியாவால் ஆகஸ்ட் 14ம் தேதியில் இருந்து அவர் லைஃப் சப்போர்ட்டில் இருந்தார். எங்களின் மருத்துவர் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வந்தது. செப்டம்பர் 4ம் தேதி அவருக்கு பரிசோதனை செய்தபோது கோவிட் 19 நெகட்டிவ் என்று தெரிய வந்தது.

இந்நிலையில் மேக்சிமம் லைஃப் சப்போர்ட் மற்றும் எங்கள் குழுவின் சிறந்த முயற்சியையும் தாண்டி இன்று காலை அவரின் நிலைமை மேலும் மோசமடைந்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் செப்டம்பர் 25ம் தேதி மதியம் 1.04 மணிக்கு உயிரிழந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் குடும்பத்தார், நண்பர்கள், நலம் விரும்பிகள் ஆகியோருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராகதேவனின் புதல்வரான எஸ்.பி.பி-ன் மறைவு செய்தி பட்டி தொட்டியெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 74 வயதாகும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஜூன் 4, 1946ல் பிறந்தார். 1966ம் ஆண்டு சினிமாவுக்காக பாடும் பயணத்தை துவங்கினார் எஸ்.பி.பி. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காளி உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார்.

இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு அவர் ராசியான பாடகராகவும் இருந்திருக்கிறார். தனது குரலால் உலகையே வசப்படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசை பிரியர்களின் உலகம் என்றே கூறலாம்.