பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், சிகிச்சை பலனின்றி சென்ற வாரம் வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை பில் பற்றி தற்போது ஒரு வதந்தி பரவி வரும் நிலையில் அது பற்றி எஸ்பிபி சரண் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்திருக்கிறார். வதந்தி பரப்புபவர்களை அவர் கோபத்துடன் சாடியிருக்கிறார். 

சரண் பேசுகையில், நான் அப்டேட் கொடுப்பதற்காக ஆன்லைன் வந்து சில காலம் ஆகி விட்டது. அப்பாவின் இழப்பால் குடும்பத்தினர் கவலையில் இருக்கும் சூழ்நிலையில், இப்படி ஒரு லைவ் வீடியோ மூலம் நான் விளக்கம் அளிக்க வேண்டியதாக இருக்கிறது. இதை கூற இது சரியான தளம் தானா என்று கூட உறுதியாக தெரியவில்லை. ஆனால் இது பற்றி நான் பேசுவது அவசியமாகிறது. எம்ஜிஎம் மருத்துவமனை மற்றும் அப்பாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. 

நாங்கள் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் மருத்துவமனையில் இருக்கிறோம். செப்டம்பர் 24ம் தேதி அப்பா காலமானார். சிகிச்சைக்காக பெரிய தொகை பில்லாக போடப்பட்டது என்றும், நாங்கள் ஒரு தொகை கட்டியதாகவும், மீதம் செலுத்த வேண்டிய தொகைக்காக தமிழக அரசை நாங்கள் அணுகியதாகவும், ஆனால் அவர்கள் உதவி செய்யாததால், குடியரசு துணை தலைவரை நான் அணுகியதாகவும், அவர் உடனே உதவினார் என்றும் வதந்தி பரவி இருக்கிறது. 

பணத்தை முழுமையாக செலுத்தினால் மட்டுமே அப்பாவின் உடலை அவர்கள் தருவார்கள் என்றும் சொன்னதாக செய்தி பரவி உள்ளது. நான் ஒரே ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது உண்மை இல்லை. இப்படி ஏன் செய்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை. இது பற்றி எந்த வித விளக்கமும் கேட்காமல், எவ்வளவு துயரமாக இது இருக்கிறது என்று கூட அறியாமல் இப்படி பேசுகிறார்கள். இப்படியும் மக்கள் இருக்கிறார்கள் என எனக்கு வருத்தமாக இருக்கிறது. 

அவர்கள் எஸ்பிபி-யின் ரசிகர்களாக இருக்க முடியாது. அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். எஸ்பிபி யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டார், அவர் இவர்களையும் மன்னித்து விடுவார். இப்படி வதந்தி பரப்புபவர்களை நான் மன்னித்து விடுகிறேன். ஆனால் அவர்கள் வளர வேண்டும், கொஞ்சம் முதிர்ச்சி அடைய வேண்டும். இது பற்றி அவருக்கு எதுவும் தெரியவில்லை, என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்று அவர்களுக்கு தெரியவில்லை. பில் எவ்வளவு, யார் எவ்வளவு தொகை கட்டினார்கள் என்பது பற்றி நான் இப்போது விவரங்களை வெளியிட விரும்பவில்லை. 

ஏனென்றால் நானும், மருத்துவமனையும் இணைந்து ஒரு ப்ரெஸ் ரிலீஸ் வெளியிட உள்ளோம். இப்படி நாங்கள் செய்ய வேண்டும் என்பது வருத்தமாக இருக்கிறது. ஒருவர் செய்யும் தவறுக்காக, பலருக்கும் சிரமம் ஏற்படுகிறது. எதோ ஒரு விஷ்யத்தை ஆன்லைனில் பதிவிட்டுவிட்டு, பலருக்கும் இப்படி பிரச்சனை ஏற்படுத்துகிறார்கள். இப்படி வதந்தி பரப்புபவர்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இது மட்டுமே என்னால் சொல்ல முடியும் என்று எஸ்.பி. சரண் கோபத்துடன் பேசியுள்ளார். 

இதுபோன்ற சூழ்நிலையில் கூட வதந்தி பரப்புவதா ? என்று வதந்தி கிளப்புவோர்களை வறுத்தெடுத்து வருகின்றனர் இணையவாசிகள்.