மக்கள் விரும்பும் நகைச்சுவை கலைஞனாக திகழ்பவர் சூரி. பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்த இவருக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சூரியின் எதார்த்தமான காமெடி பல ரசிகர்களை இவருக்கு பெற்றுத்தந்தது. விஜய், அஜித், விஜய்சேதுபதி, விஷால், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

கடந்த ஆண்டு லாக்டவுன் முழுவதும் தனது குடும்பதினருடன் நேரத்தை செலவு செய்தார் சூரி.  குழந்தைகளை குளிக்க வைப்பது, வீட்டை சுத்தம் செய்வது. அவ்வப்போது கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுவது என சூரி வெளியிட்ட வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்களை ஈர்த்தது. 

சமீபத்தில் மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடியுள்ளார். அப்போது அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார். மேலும் குழந்தைகளுக்கு தேவைப்படும் நோட், ஸ்கூல் பேக், உண்டியல் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேர வேண்டும் என்று குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கியதோடு அவர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். 

தொடர்ந்து படப்பிடிப்பு என பிஸியாக இருக்கும் சூரி, சமூக வலைத்தளங்கில் கருத்துள்ள பதிவுகளை பதிவிடும் பழக்கம் உள்ளவர். விவசாயத்தின் மகிமையை உணர்த்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விவசாயிகளிடம் பேரம் பேசாமல் இளநீர் எடுத்து செல்வது போல் இந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளது. 

தற்போது வெற்றிமாறன் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் சூரி. இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறதாம். ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்திலும் உள்ளார் சூரி. இதன் ரிலீஸ் தேதி சமீபத்தில் வெளியானது. சிவா இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொரோனா காரணமாக நின்றது. தற்போது மீண்டும் துவங்கப்பட்டு நடைபெற உள்ளது.