தமிழ் திரையுலகில் மக்கள் விரும்பும் நகைச்சுவை கலைஞனாக திகழ்பவர் சூரி. பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்த இவருக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சூரியின் எதார்த்தமான காமெடி பல ரசிகர்களை இவருக்கு பெற்றுத்தந்தது. விஜய், அஜித், விஜய்சேதுபதி, விஷால் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது லாக்டவுன் என்பதால் தனது குடும்பதினருடன் நேரத்தை செலவு செய்து வருகிறார் சூரி. 

குழந்தைகளை குளிக்க வைப்பது, வீட்டை சுத்தம் செய்வது. அவ்வப்போது கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுவது என தனது வீடியோக்களை வெளியிட்டு வந்தார் சூரி. மேலும் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருவார். இந்த லாக்டவுனில் சூரி செய்த சிறப்பான காரியம் என்னவென்றால், மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியது. லாக்டவுனில் வீட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நினைவுப்படுத்தும் வகையில் சிரிப்போம், சிந்திப்போம் என்ற தலைப்பில் நடிகர் சூரி கலந்துரையாடல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

கடைசியாக தனது கருப்பன் காளையுடன் கம்மாய்க்கரைக்கு செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு அசத்தினார். இந்நிலையில் சூரி ஜிம்மில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது ஆரம்பகால படங்களில் ஒல்லியாக இருந்த சூரி, தீவிர உடற்பயிற்சியின் மூலம் கட்டுடலை பெற்றார். சீமராஜா படத்தில் 6 பேக்ஸுடன் தோன்றிய சூரியை யாராலும் மறக்க முடியாது.  

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார் சூரி. பாண்டிராஜ் இயக்கிய இந்த திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார். 

கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கவுள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் அண்ணாத்த படப்பிடிப்பில் சூரி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து வெற்றிமாறன் இயக்கவிருக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் சூரி.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Back to Gym 💪🏋️‍♂️ #reels

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on