தமிழ் திரையுலகில் பிஸியான நடிகர்களில் ஒருவர் சூரி. கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை மற்றும் விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கவுள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 

படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் அண்ணாத்த படப்பிடிப்பில் சூரி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து வெற்றிமாறன் இயக்கவிருக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் சூரி.

நடிகர் சூரி சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினர். அவருக்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வாழ்த்து கூறினார்கள். அவர்களுக்கு எல்லாம் சூரி ட்விட்டரில் நன்றி கூறி இருந்தார். கொரோனா காரணமாக சினிமா ஷூட்டிங் எதுவும் நடைபெறவில்லை என்பதால் சூரி தன்னுடைய குடும்பத்தினருடன் தான் நேரத்தினை செலவிட்டு வருகிறார். அவர் தனது பிறந்தநாளை மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடி இருக்கிறார்.

அவரது குழந்தைகள் சற்று வித்யாசமான ஒரு கேக்க்கை அவருக்கு கொடுத்திருக்கிறார்கள். அதில் கேக் செலவு 1500, பெட்ரோல் செலவு 500, டெகரேஷன் செலவு 2000, மொத்தம் 4000. மொத காசை எடுத்து வெச்சிட்டு கேக்கை வெட்டு என அதில் எழுதி இருக்கிறார்கள். 400ருவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க. இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.. தேங்க்யூ கட்டிபெத்தார்களா என சூரி பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

சூரிக்கு வெண்ணிலா என்ற மகளும், ஷ்ரவன் என்ற மகனும் உள்ளனர். அவர்கள் இருவரும் செய்யும் அட்ராசிட்டியை பற்றி ட்விட்டரில் எப்போதும் சூரி அதிகம் பதிவிட்டு வருகிறார். கொரோனா லாக் டவுன் நேரத்தில் அவர் தனது குழந்தைகள் செய்யும் பல்வேறு விஷயங்கள் பற்றி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சூரி பிறந்தநாள் ஸ்பெஷலாக தமிழநாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர் மன்றங்கள் ரத்த தானம், மரக்கன்று நடுதல், இனிப்பு வழங்குதல் என பல விஷயங்களை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு நன்றி கூறி சூரி ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது..

உங்கள் அன்பு எனும் வாழ்த்து மழையால் என்னை முழுவதும் நனையவைத்து என் பிறந்த நாளை சிறந்த நாளாய் மாற்றிய உங்கள் அனைவருக்கும் எனது இதயம்கனிந்த நன்றிகள். நேற்று என் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் கூறிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள், சமூக வலைதள நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.