திரை ரசிகர்களுக்கு சூர்யா தந்த தீபாவளி விருந்து சூரரைப் போற்று திரைப்படம். சுதா கொங்கரா இயக்கிய இந்த படம் அமோக வரவேற்பை பெற்றது. அமேசான் பிரைமில் வெளியான இந்த படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, பரேஷ் ராவல், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் பணிகளை செய்திருந்தார். சமீபத்தில் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூரரைப் போற்று படத்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் ஷங்கர் கூறியிருப்பதாவது, சூரரைப் போற்று திரைப்படத்தை அண்மையில் ரசித்தேன். ஜி.வி. பிரகாஷின் ஆத்மார்த்தமான இசையுடன் இருந்தது என பாராட்டி இருந்தார். 

இந்நிலையில் இப்படத்தை தயாரித்த 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் புதிய மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்யும் முதியவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வயதானவர்களே படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்தி தந்த 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை பாராட்டி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள். 

இந்த படம் சமீபத்தில் 2020 ட்விட்டர் ட்ரெண்டிங்கில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இரண்டாவது படம் என்ற பெருமையை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது கூகுள் தேடலிலும் இந்த படம் இந்திய அளவில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூர்யா அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சூர்யா 40 படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இந்த திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.