2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30-ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், தற்போது வரை விளம்பரப்படுத்தும் பணிகள் எதுவுமே தொடங்கப்படவில்லை. 

இதுவே, சமூக வலைதளத்தில் பெரும் சந்தேகத்தை உருவாக்கியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமேசான் நிறுவனம் கடந்த அக்டோபர் 21 வெளியிட்ட இந்த மாதத்துக்கான படங்கள் வெளியீட்டுப் பட்டியலில் சூரரைப் போற்று படத்தின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாயினர். இந்நிலையில் சூரரைப் போற்று வெளியீடு தாமதம் ஆனதற்கான பின்னணி குறித்து நடிகர் சூர்யா ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

படத்தின் பின்னணி இசையின் மேக்கிங் வீடியோவை சில நாட்கள் முன்பு வெளியிட்டார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் ட்ரெண்ட் செய்தனர் சூர்யா ரசிகர்கள். பயோபிக் என்பதால் பின்னணி இசையின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது படத்தின் புதிய பாடலான ஆகாசம் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. கிரிஸ்டின் ஜாஸ் மற்றும் கோவிந்த் வசந்தா பாடியுள்ள இந்த பாடல் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இந்த பாடல் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.