தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் வந்த S.J.சூர்யா முதலில் வாலி,குஷி திரைப்படங்களை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து அவரது இயக்கத்தில் வெளிவந்த நியூ மற்றும் அன்பே ஆருயிரே திரைப்படங்களின் மூலம் நடிகராகவும் களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து பல இயக்குனர்களின் திரைப்படங்களில் கதாநாயகராக நடித்தவர். தளபதி விஜயின் மெர்சல் திரைப் படத்தில் வில்லனாகவும் மிரட்டினார்.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி திரைப்படத்தின் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபித்தார் S.J.சூர்யா. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான மான்ஸ்டர் மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அழகிய தீயே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ராதாமோகன் தொடர்ந்து மொழி, அபியும் நானும், பயணம் என பல திரைப்படங்களை இயக்கி தனக்கென தமிழ்சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார். இப்போது இவர் இயக்கிய மலேசியா டு அம்னீசியா என்ற திரைப்படம் ZEE 5 OTT தளத்தில் நேரடியாக வெளியாக உள்ள நிலையில் இவருடைய அடுத்த திரைப்படத்தை பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் ராதாமோகன் - S.J.சூர்யா இணைந்து பணியாற்றும் படம்தான் பொம்மை. 2019ஆம் ஆண்டு நடிகர் தனுஷ்  இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகள் மும்முரமாக தொடங்கியது. கடந்த வருடத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் தாக்கத்தால்  ஊரடங்கு போடப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது இப்போது இத்திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. 

பொம்மை திரைப்படத்தில் S.J.சூர்யாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ரிச்சர்ட் எம் நேதன் ஒளிப்பதிவு செய்கிறார். சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக வரவுள்ள பொம்மை திரைப்படம் சென்சாரில் U/A சான்றிதழை பெற்றுள்ளது.2மணி நேரம் 25 நிமிடங்கள் 11 வினாடிகள் ஓடும் இத்திரைப்படத்தின்  சென்சார் சான்றிதழ் விவரங்களை சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் கார்ப்பரேஷன் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.