இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி வெற்றி பெற்ற S.J.சூர்யா தொடர்ந்து கதாநாயகனாக களமிறங்கினார். பின்னர் முக்கிய கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் அசத்தி வரும் S.J.சூர்யா சமீபத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் நடித்து வெளிவந்த மாநாடு திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
 
முன்னதாக சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள டான் திரைப்படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள S.J.சூர்யா, இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை மற்றும் இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் கடமையை செய் உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து நடிக்கும் புதிய திரைப்படத்தில் மீண்டும் வில்லனாக மிரட்ட உள்ளார். மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் #VISHAL33 படத்தில் S.J.சூர்யா நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் S.J.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில்,

“ஓ இறைவனே எல்லா நல்ல கதையையும் என்கிட்டயே அனுப்புறியே... சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய கதையில் அசந்துவிட்டேன்… கட்டாயமாக இது மாநாடு 2 என சொல்லலாம்… அப்படி ஒரு திரைக்கதை…"

என குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். நடிப்பின் காதலனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் S.J.சூர்யா புத்தாண்டு பரிசாக பகிர்ந்த இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.