அஜித் குமார் நடித்த வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் SJ.சூர்யா தொடர்ந்து தளபதி விஜயுடன் இணைந்த குஷி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதனையடுத்து நடிகராக அவதாரம் எடுத்த SJ.சூர்யா நியூ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கி அடுத்தடுத்து வரிசையாக பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார்.

கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் மிக முக்கிய வேடங்களிலும் மிகச் சிறப்பாக நடத்து ரசிகர்களிடையே தனக்கென தனி இடம் பிடித்த SJ.சூர்யா முன்னதாக இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடித்துள்ள பொம்மை திரைப்படம் நிறைவடைந்து விரைவில் ரிலீஸாக தயாராகும் நிலையில், தொடர்ந்து நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து உயர்ந்த மனிதன் படத்தில் நடித்து வருகிறார் SJ.சூர்யா.

அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் முன்னணி தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் RC15 திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் SJ.சூர்யா, தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகும் மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடைய இசை படத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக களமிறங்கும் SJ.சூர்யா 2023 ஆண்டின் துவக்கத்தில் கில்லர் திரைப்படத்தை தயாரித்து இயக்க உள்ளார். பல மொழி நடிகர்களும் நடிக்கவுள்ள இத்திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்காக ஜெர்மனியிலிருந்து பிரத்தியேகமாக கார் ஒன்றை இம்போர்ட் செய்துள்ளார் SJ.சூர்யா. 

இந்நிலையில் குஷி திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காரின் 100 என்ற ரிஜிஸ்ட்ரேஷன் எண் கொண்ட நம்பர் பிளேட் கில்லர் திரைப்படத்துக்காக பிரத்தியேகமாக கொண்டுவரப்பட்ட காருக்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே SJ.சூர்யாவின் கில்லர் படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.