தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் இயக்குனராக திகழ்ந்த இயக்குனர் SJ.சூர்யா நடிகராகவும் அடுத்தடுத்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். முன்னதாக சிவகார்த்திகேயன் மற்றும் SJ.சூர்யா இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்த டான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

தொடர்ந்து வெப்சீரிஸிலும் களமிறங்கியுள்ள SJ.சூர்யா விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் க்ரைம் த்ரில்லர் வெப்சீரிஸாக வெளிவரவுள்ள வதந்தி வெப் சீரிஸில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் மிரட்டலான கதாப்பாத்திரத்தில் S.J.சூர்யா நடிக்கிறார். 

மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்  பூஜையுடன் தொடங்கியது. மேலும் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து உயர்ந்த மனிதன் என S.J.சூர்யா நடித்துள்ள திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. 

இந்த வரிசையில் முன்னதாக இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் SJ.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கடமையை செய். யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ள கடமையை செய் படத்தை கணேஷ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நஹர் பிலிம்ஸ் இணைந்து வழங்க, வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவில், அருண்ராஜ் இசையமைத்துள்ளார். 

சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடும் கடமையை செய் திரைப்படம் வருகிற ஜூன் 24-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடமையை செய் திரைப்படத்திலிருந்து கலக்கலான கடமையைச் வீடியோ பாடல் வெளியானது. அந்த வீடியோ பாடல் இதோ…