தமிழ் சினிமாவின் இன்றியமையாத கதாநாயகர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் வகையில் அழகான கமர்சியல் திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள டாக்டர் திரைப்படம் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் அயலான் திரைப்படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள டான் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தொடங்கியது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ள டான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க பிரியங்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, சூரி, முனீஸ்காந்த், பாலசரவணன், காளி வெங்கட், விஜய் டிவி சிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இதன் இறுதிகட்ட பணிகளில் தற்போது டான் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டான் படத்தின் டப்பிங் பணிகளை பூஜையோடு இன்று தொடங்கியுள்ளனர். விரைவில் அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.