தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் இயக்கிய பல படங்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. சேது படத்தில் தொடங்கிய இவரின் திரைப்பயணம், இவரை சிறந்த இயக்குனர் பட்டியலில் சேர்த்துள்ளது. அதைத்தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி போன்ற ஹிட் படங்களை திரையுலகிற்கு தந்துள்ளார். அதே நேரத்தில் அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலமாக படம் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது பாலா தயாரிப்பில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ள புதிய படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். ஜோசப் என்ற மலையாள படத்தில் ரீமேக் தான் இந்த படம். இதற்கு தமிழில் விசித்திரன் என பெயரிட்டிருக்கிறார்கள்.

ஜோசப் படத்தில் ஜோஜு ஜார்ஜ் ஹீரோவாக நடித்திருந்தார். க்ரைம் திரில்லரான இப்படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பு அந்த படம் பெற்ற நிலையில் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. விசித்திரன் படத்தினை இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கி வருகிறார்.

இன்று காலை வெளியான விசித்திரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். இறுதிக் கட்ட பணிகளில் என போஸ்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்பதால் படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று தெரிகிறது. இதனால் விரைவில் இந்த படம் ரிலீஸாக வாய்ப்பு இருக்கிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.கே சுரேஷ் இதற்கு முன்பு பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் கொடூரமான வில்லனாக நடித்திருந்தார். அது தவிர பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார். விசித்திரன் படத்தில் அவர் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ரோலுக்காக அவர் தன்னுடைய உடலை ஃபிட்டாக 73 கிலோவாக குறைத்து இருந்தார். 

மற்றொரு ரோலுக்காக அவர் 22 கிலோ உடல் எடையை அதிகரித்து குண்டாக தொப்பையுடன் இருக்கும் புகைப்படமும் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி இருந்தது. ஒரு ரோலுக்கு 95 கிலோ, மற்றொரு ரோலுக்கு 73 கிலோ என அப்படியே தன்னுடைய உடலை ஆர்கே சுரேஷ் மாற்றியிருந்தது பலருக்கும் மிகப் பெரிய ஆச்சர்யத்தை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் ஜோசப் படத்தினை இயக்கிய எம் பத்மகுமார் தான் தமிழிலும் அதனை இயக்கி உள்ளார். இதற்கு முன்பு அவர் மோகன்லால், மம்முட்டி போன்ற மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வில்லன் பாத்திரம் மட்டும் அல்லாமல் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் தன்னை தயார் செய்து கொண்டவர் நடிகர் ஆர். கே. சுரேஷ். கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.