தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர தயாராகி வருகின்றன. நடிகர் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். 

முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பரான அருண் ராஜா காமராஜ் இயக்கிய முதல் திரைப்படமான கனா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கினார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் திரைப்படத்தின் ரிலீஸ் பற்றிய முக்கிய தகவல் இன்று வெளியானது. 

தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றான அருவி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ள வாழ் திரைப்படத்தில் பிரதீப் அண்டனி, டி.ஜே.பானு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரபல பாடகரான பிரதீப்குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு செல்லி கேளிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் வாழ் திரைப்படம் தற்போது நேரடியாக OTTயில் வெளியாகிறது. 

பிரபல OTT நிறுவனமான சோனிLIV  OTT தளத்தில் வாழ் திரைப்படம் வருகிற ஜூலை 16ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இதன்  அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் ,தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அருவி படத்திற்கு பிறகு இயக்குனர் அருண் புருசோத்தமன் இயக்கியுள்ள வாழ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.