தமிழக சின்னத்திரை வாயிலாக மக்கள் அனைவரது வீட்டில் ஒருவராக இடம்பிடித்த சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையிலும் வெற்றி வாகை சூடி ஜனங்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக மக்களை மகிழ்வித்து வருகிறார் .

அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள ஏலியன்-சயின்ஸ் பிக்சன் படமான அயலான், இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் ஆகிய திரைப்படங்கள் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன்,வினய் ராய்,யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லீ ஆகியோர் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள டாக்டர் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பின் திரையரங்குகளை கைதட்டலாலும் சிரிப்பொலியாலும் நிறைய வைத்த டாக்டர் வெளியான அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப்குமார், பிரியங்கா அருள்மோகன், வினய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு கேக் வெட்டி டாக்டர் வெற்றியை கொண்டாடினர்.