சின்னத்திரை வாயிலாக தமிழக மக்கள் அனைவரது வீட்டிலும் தனக்கென ரசிகர் பட்டாளம் அமைத்த சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையிலும் வெற்றி வாகை சூடி ஜனங்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

அடுத்தடுத்து திரைப்படங்கள் வரிசையாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் ரசிகர்களை கவர தயாராகி வருகிறது. முன்னதாக இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் ஏலியன்-சயின்ஸ் பிக்சன் படமான அயலான் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ள சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டாக்டர் திரைப்படம் வருகிற அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்க, நடிகர் வினய் ராய் வில்லனாக நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து டாக்டர் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

முன்னதாக வெளியான டாக்டர் திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் டாக்டர் திரைப்படத்தின் டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது. டாக்டர் திரைப்படத்தின் டிரைலர் வருகிற செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.