தனது கடின உழைப்பாலும் அசாத்தியத் திறமையாலும் மக்களின் மனங்களை கொள்ளையடித்து தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டான் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனையடுத்து இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் காமெடி திரைப்படமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்திற்கான VFX மற்றும் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் #SK21திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே முதல்முறையாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் சிவகார்த்திகேயன் #SK20 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல தெலுங்கு இயக்குனர் K.V.அனுதீப் இயக்கத்தில் உருவாகும் #SK20 திரைப்படத்தில் மரியா ரியாபோஸ்கா எனும் உக்ரைன் நாட்டை சேர்ந்த நடிகை கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ் மற்றும் பிரேம்ஜி அமரன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.முன்னணி இசையமைப்பாளர் தமன்.S #SK20 இசையமைக்கிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் #SK20 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி #SK20 திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.