நம்ம வீட்டு பிள்ளை படத்துக்குப் பிறகு கோலமாவு கோகிலா புகழ் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மார்ச் 26-ம் தேதி டாக்டர் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

ஆனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் படத்தை வெளியிடும் கே.ஜே.ஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மார்ச் 26-ம் தேதி படத்தை வெளியிட உற்சாகத்தோடு இருந்தோம். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். படம் தொடர்புடைய அத்தனை தரப்பின் நலனையும், குறிப்பாக ரசிகர்களையும் மனதில் வைத்து இம்முடிவை எடுத்துள்ளோம்.

புதிய தேதியை இன்னும் சில நாட்களில் அறிவிப்போம். டாக்டர் படம் ஆரம்பித்த நாளிலிருந்தே கொடுத்து வந்த ஆதரவை, ஊக்கத்தை அப்படியே வைத்திருங்கள். இந்தக் காத்திருப்புக்கு மதிப்புடைய படமாக டாக்டர் இருக்கும் என்று கே.ஜே.ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாக்டர், அயலான் இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கையுமே முடித்த சிவகார்த்திகேயன், தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.