திரையுலகில் எத்தனையோ பிரபலங்களும் நட்சத்திரங்களும் மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள் ஆனால், ஒரு சிலர் மட்டுமே மக்களின் அபிமானத்தையும் தாண்டி அவர்களின் நெருங்கிய நண்பராக சகோதரராக வீட்டில் ஒருவராக இணைகிறார்கள். அப்படி ஒரு நட்சத்திரம் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக நுழைந்து தொகுப்பாளராக அதே தொலைக்காட்சியில் வளர்ந்து பின் சினிமாவில் நடிகனாக களமிறங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக உயர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன். மக்களை மகிழ்விப்பதே கலைஞனின் தலையாய கடமை என்பதை உணர்ந்து தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக நல்ல திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் என்டர்டெய்னராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன்.

அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டாக்டர், இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அயலான், இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வர தயாராகி வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியினருக்கு முதலாவதாக பிறந்த பெண் குழந்தை ஆராதனா. செல்லக்குட்டி ஆராதனா  வாயாடி பெத்த புள்ள பாடலை பாடி தமிழ் ரசிகர்களின் செல்லப்பிள்ளை ஆனது. அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து சிவகார்த்திகேயன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

இந்தப் பதிவில்,

18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி...அம்மாவும் குழந்தையும் நலம்

என தெரிவித்திருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். சிங்கக்குட்டி வந்தாச்சே...