ஒல்லியான கையோடு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிலம்பரசன். மேலும் சமூக வலைதளங்களில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். சிம்பு ஒல்லியான பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதில் இருந்தே பலரும் அவரை பற்றி தான் பேசுகிறார்கள். அப்படி இருந்த சிம்புவா இப்படி ஆகிட்டார் என்று வியக்கிறார்கள். சிம்பு தன் உடல் எடையை குறைக்க ஜிம்மில் ஒர்க்அவுட் மட்டும் செய்யவில்லை. நீச்சல், கூடைப்பந்து, டென்னிஸ் போன்ற பல விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சிம்பு பரதநாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுத் தருபவர் வேறு யாரும் இல்லை, நடிகை சரண்யா மோகன் தான். அவர் கடந்த இரண்டு வாரங்களாக சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறாராம். நடிகை சரண்யா மோகன், வெண்ணிலா கபடி குழு, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வேலாயுதம் படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்த [பெருமையும் உண்டு. 

சரண்யா சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. படத்திற்காக சிம்பு பரதநாட்டியம் கற்கவில்லையாம். அவருக்கு ஆசையாக இருந்ததால் கற்றுக் கொண்டிருக்கிறாராம். சிம்பு நன்றாக டான்ஸ் ஆடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர் பரதம் வேறு கற்றுக் கொண்டிருக்கிறார். புதிதாக ஏதாவது கற்றுக் கொள்வ வேண்டும் என்ற தேடலே அவரது ரசிகர்களை பெருமை அடையச் செய்துள்ளது.

சிம்பு ஒல்லிக்குச்சியானதை பார்த்தவர்கள் அவர் சுசீந்திரன் படத்திற்காக தான் உடல் எடையை குறைத்தார் என்று பேசினார்கள். ஆனால் தன் கஷ்ட காலத்திலும் தன்னுடன் இருந்த ரசிகர்களுக்காக தான் சிம்பு ஒல்லியாகியிருக்கிறார் என்று அவரின் ட்ரெய்னர் சந்தீப் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். 

கிராமத்து பின்னணி கொண்ட ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்கவிருக்கிறார் சுசீந்திரன். ஈஸ்வரன் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகவிருக்கிறது. ஒரு மாதத்தில் படப்பிடிப்பை முடித்து ஒரு படம் ரிலீஸாகிறதா என்று தான் அனைவரும் வியப்பில் இருக்கிறார்கள்.

ஈஸ்வரன் படத்தை முடித்த பிறகு சிம்பு, வெங்கட் பிரபுவின் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்வார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார்.