சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் வெங்கட்பிரபு தொடர்ந்து சரோஜா கோவா மங்காத்தா சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்த வெங்கட்பிரபு இயக்கிய திரைப்படம் மாநாடு.நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் மாநாடு திரைப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்  கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் சிறந்த இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள மாநாடு திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க எஸ்ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 

இதையடுத்து இதன் பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மறைவு காரணமாக பாடல் வெளியீடு தள்ளிப் போனது. இதையடுத்து மாநாடு திரைப்படத்தின் இசை உரிமைகளை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் U1ரெக்கார்டுஸ் நிறுவனம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாநாடு திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்  மாநாடு பட முதல் பாடலின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் வருகிற “ஜூன் 21”-ஆம் தேதி “மாஷா அல்லா” என்ற முதல் பாடல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெகுநாட்களாக பாடலுக்காக காத்திருந்த நடிகர் சிலம்பரசன் மற்றும் இசையமைப்பாளர்  யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுக்கு விருந்தாக மாநாடு திரைப்படத்திலிருந்து  மாஷா அல்லா பாடல் வருகிற 21ம் தேதி வெளியாகிறது.