சிலம்பரசன் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியாகவிருக்கும் திரைப்படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய இந்த படத்தில் நிதி அகர்வால், பாரதிராஜா, நந்திதா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியானது. பின்னணி இசை மற்றும் விறுவிறுப்பான காட்சிகள் என ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. சிம்பு தன் உடல் எடையை குறைத்த பிறகு நடித்த முதல் படம் ஈஸ்வரன் என்பதால், திரையரங்கில் இப்படத்தினை கொண்டாட ஆவலாக உள்ளனர் சிம்பு ரசிகர்கள். எதிரியை பார்த்து சிம்பு பேசும் வசனத்திற்கு திரையரங்கம் அதிரும் என்றே கூறலாம். நீ அழிகிறதுக்காக வந்த அசுரன்னா... நான் காக்குறதுக்காக வந்த ஈஸ்வரன் டா என்று பஞ்ச் பேசுகிறார். 

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. ஓவர்சீஸ் உரிமையை AP இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஈஸ்வரன் படத்தின் டீஸர் மற்றும் தமிழன் பாட்டுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. படத்தின் ட்ரைலர் வெளிவருமா என்ற ஆவலில் உள்ளனர் சிம்பு ரசிகர்கள். 

பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கும் ஈஸ்வரன் படம் குறித்து நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார் சிம்பு. அதில் ஈஸ்வரன் திரைப்படம் மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத் தான். திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம். அதற்காகத் தான் இந்தக் கொரோனா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில்நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல.

இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அதேசமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வர வேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்த மீடியமிற்கு செய்யும் மரியாதை.

அதில் எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள். அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார். திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள்.

என் ரசிகர்கள், மாஸ்டர் படம் பாருங்கள், விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள். திரையரங்குகள் நிறையட்டும். கொரோனா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றிபெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும். அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மகிழ்விக்கும் என்று அறிக்கையில் கூறியிருந்தார் சிம்பு. 

இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் கலந்துகொள்ள இருக்கிறார் சிம்பு. கல்யாணி பிரியர்தர்ஷன், பிரேம்ஜி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடித்து வருகின்றனர். கடந்த வாரம் சிம்புவின் பத்து தல படத்தின் அறிவிப்பு வெளியானது. கெளதம் கார்த்திக் மற்றும் சிலம்பரசன் இணைந்து நடிக்கும் இப்படத்தை கிருஷ்ணா இயக்கவுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.